தன்னிகரில்லா
வீரத்தின் மொத்த உருவமாயும், பகத்சிங்
போன்ற மாபெரும் புரட்சியாளர்களிற்கு இணையானவராகவும், பிரிட்டிஷார்கள் இவரைக் கண்டாலே நடுங்கும்
அளவிற்கு பயந்திருந்தார்கள் என்றும், சிறந்த பேச்சாளர், தன்
கண்ணசைவிற்குக் காத்திருக்கும் ஓர் பெரும் சீடர்
படைகளைக் கொண்ட பன்முகத்துக்கு சொந்தக்காரர் வீர் சாவர்க்கர் என்று
அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.
வீர் சாவர்க்கர் (துணிவுமிக்க சாவர்க்கர்) என அனைவராலும் அறியப்படுகிறார். வீர் சாவர்க்கர் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் கொண்டவர். இவரைப்போல் ஆங்கிலேயரால் 50ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டவர் வேறு யாரும் கிடையாது. ஆங்கிலேயர் கொடுத்த இந்தத் தண்டனையில் இருந்தே அவர் எந்த அளவுக்கு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார் என்பதை நாம் அறியலாம். அவர் ஆங்கிலேயரை எதிர்த்ததால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டார்.
இந்திய
சுதந்திரத்திற்காக இந்தியாவில் அபிநவ் பாரத் சங்கமும்
லண்டனில் சுதந்திர இந்திய சங்கமும் உருவாக்கினார். இந்திய விடுதலை இயக்கம்-1857
என்ற நூலை எழுதினார். இந்து மகாசபையை உருவாக்கினார்.
இவர் மிகச் சிறந்த சமூக
சீர்திருத்தவாதி. தீண்டாமையை ஒழிக்கப்பாடுபட்டார்.
வீர் சாவர்க்கரின் இயற்பெயர் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இவர் 1883-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் அருகில் பாகுர் என்ற கிராமத்தில் தாமோதர் பந்த் சாவர்க்கர், ராதா பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள் ஒரு சகோதரி. இவர் நாசிக்கில் பள்ளிக்கல்வியை முடித்தார். இவர் தனது 11-ஆவது வயதிலேயே சிறுவர்களைச் சேர்த்து வானரசேனையை உருவாக்கினார். இவர் பள்ளிப்பருவத்தில் திலகர் ஏற்படுத்திய சிவாஜி உற்சவம், கணபதி உற்சவம் போன்றவற்றை முன்னின்று நடத்தினார். இவர் தனது 9-ஆவது வயதில் தாயையும், 16-ஆவது வயதில் தந்தையையும் இழந்தார். 1898-ல் மகாராஷ்டிராவில் ராண்ட் மற்றும் ஐர்ஸ்ட் ஆகியோரைக் கொன்றதற்காக சபேகர் சகோதாரர்கள் தூக்கிலிடப்பட்டனர். அது சாவர்க்கரைக் கடுமையாகப் பாதித்தது. அவர் 15- ஆவது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக துர்கா தேவி முன்பு சபதம் எடுத்தார்.
1901-ஆம் ஆண்டு யமுனா பாயை மணந்தார். 1902-ல் ஃபெர்குஸன் கல்லூரியில் சேர்ந்தார். புனாவில் அபிநவ் பாரத் சங்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் திலகரின் சுயராச்சியக்கட்சியில் சேர்ந்தார். பாலகங்காதர திலகரே இவரது அரசியல் குரு ஆவார். இவரது வீரம் மிக்க சொற்பொழிவுகளால் எரிச்சலுற்ற ஆங்கில அரசு அவரை கல்லூரியில் இருந்து நீக்கியது. ஆனால் அவர் தேர்வு எழுதி பட்டம் பெற்றார். 1905-ல் திலகரின் அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.
ஜூன் 1906-ல் பாரிஸ்டர் படிப்புக்கு லண்டன் சென்றார். அங்கே இந்தியா ஹவுஸ் என்ற இடத்தில் இந்திய மாணவர்களைச் சேர்த்து சுதந்திர இந்திய சங்கத்தை உருவாக்கினார். அங்கே முக்கிய இந்திய விழாக்கள் கொண்டாடப்பட்டன. அங்கே கூடுபவர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி எடுத்துக் கூறினார். அதில் பெண்களும் இருந்தனர். அங்கே குண்டுகள் தயாரிக்கவும் துப்பாக்கி சுடவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறித்து அறிய இயலாமல் ஸ்காட்லாந்து காவல் துறையினரே திணறினர். அவர் ஆயுதங்கள் மூலம் இந்திய சுதந்திரத்தை அடைய வழி தேடினார். இந்திய புரட்சி இயக்கத்தை அவர் உலக அளவில் நடத்தினர்.
இந்தியாவில் இருக்கும் ஆங்கில அதிகாரிகள் சிப்பாய்க் கலகம் என்று பூசி மெழுகியது கலகமோ, கலவரமோ இல்லை. அதை விரிவாக ஆராய்ச்சி செய்து அது இந்திய சுதந்திரப் போராட்டம்
தான் என்பதை நிரூபிக்கும் "இந்திய சுதந்திரப் போராட்டம்-1857"
என்னும் நூலை எழுதினார். அது வெளிவரும் முன்பே தடை செய்யப்பட்டது. 1909-ல் இந்தப் புத்தகம் மேடம் காமா அவர்களால் நெதர்லாந்தில் அச்சிடப்பட்டு வெவ்வேறு புத்தக அட்டைகளுடன் இந்தியாவிற்குக் கடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2000 புத்தகங்கள் மிக அதிக விலையில் விற்பனை ஆயின. இது ஓர் அலையையே ஏற்படுத்தியது. பிரிட்டிஷாரின் கணக்குப்படி ஒரு புத்தகம் ஆறு பேரால் படிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் பின்னர் பகத்சிங்கால் வெளியிடப்பட்டது. இதன் தமிழ் பதிப்பு சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த தமிழ் வீரர்களால் வேதம் போல் படிக்கப்பட்டது என்றால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். இது பஞ்சாபி, உருது மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது. (இந்த நூலை
படிக்க ஆவலாக உள்ளீர்களா இதை பற்றி மட்டும் பின்வரும் காலங்களில் தனி பதிவாக பதிவிடுகிறேன்).
1909-ல் சாவர்க்கரின் சீடரான மதன் லால் டிங்கரா லண்டனில் சர். கர்சன் வில்லியைச் சுட்டுக் கொன்றார். நாசிக் கலெக்டர் ஜாக்சன், ஆனந்த் லக்ஷ்மண் கான்ஹரே என்ற இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் இந்தியா ஹவுஸ் ஆங்கிலேயரின் கண்காணிப்புக்குக் கீழ் வந்தது. அதனால் ஆங்கில அரசு சாவர்க்கரை 1910 மார்ச் 13-ல் கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பியது. இந்தியாவுக்குக் கப்பலில் வரும்போது கப்பலின் கழிப்பறை ஜன்னலை உடைத்துக் கடலில் குதித்து பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்த ஒரு பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்த வழக்கு
Permanent Court of International Arbitration-ல் பிரிட்டிஷ், பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே நடந்தது. பிரிட்டிஷ் அரசு சாவர்க்கரை மீண்டும் பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை என்று தீர்ப்பு கூறப்பட்டது. அவர்மீது சட்ட விரோதமாக ஆயுதம் அனுப்பியது, மக்களைத் தூண்டும் விதமாகப் பேசியது என்று குற்றம் சாட்டி 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்தமானுக்கு அனுப்பியது. சாவர்க்கரைப் பற்றி உலகம் முழுவதும் அறிந்திருந்தனர். அவர் கைது செய்யப்பட்ட செய்தி அமெரிக்கா, சீனா, அயர்லாந்து, எகிப்து நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்தமான் சிற்றறைச்
சிறை மிகவும் கொடூரமானது. ஓர்
அறையின் அளவு சுமார் 13 அடிக்கு
7 அடி மட்டுமே. சுமார் 7 அடி உயரத்திற்கு மேல்
ஒரு சிறிய ஜன்னல் வழியே
வரும் குறைந்த வெளிச்சம் போதுமானதாக
இருக்காது. கடுமையான வேலை, மோசமான சாப்பாடு,
மனிதாபிமானமற்ற அடி, உதை, கடுமையான
குளிர் போன்றவை அந்தமான்
சிறையின் அடையாளங்கள் ஆகும்.
அந்தமான் சிறையில் சாவர்க்கருக்கு எழுதுவதற்குத் தாளும் பேனாவும் கொடுக்கப்படவில்லை. அவர் சுவரில் கல்லால் எழுதினார். மனதில் மனப்பாடம் செய்தார். இந்தியா வந்த பிறகு அவற்றை எழுதினார். சுதந்திரம் குறித்து மராத்தியில் இவர் எழுதிய கவிதைகள் மிகவும் புகழ்வாய்ந்தவை. இந்திய சுதந்திரத்திற்காக போராடியதற்காக அந்தமான் சிறையில் அவர் 11 ஆண்டுகள் சிரமப்பட்டார். பலமுறை மன்னிப்பு கடிதங்கள் எழுதி கொடுத்ததால் 1921 மே 2-ல் ரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். ரத்தினகிரி சிறையில் "இந்துத்வா" என்ற நூலை எழுதினார். ரத்தினகிரி மாவட்டத்தைவிட்டு வெளியேறக்கூடாது, அடுத்த 5 வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனை விதித்து 1924 ஜனவரி 6 அன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் காந்திஜியின் அரசியலைக் கடுமையாக விமர்சித்தார். இந்தியப் பிரிவினையை எதிர்த்தார்.
1966 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1966 பிப்ரவரி 26-ல் இறந்தார். ஒருவரது வாழ்க்கையின் நோக்கம் பூர்த்தியான பிறகு, சமூகத்திற்கு சேவை செய்யும் வலிமை இழந்த நிலையில் இறப்புக்காக காத்திருக்காமல் இறப்பைச் சந்திப்பது சிறந்தது என்று கூறினார். இது ஆத்ம ஹத்யா அல்ல, ஆத்ம சமர்ப்பணம் முதலான பல நூல்களை எழுதினார்[17]. அவர் இறந்தவுடன் இலட்சம் மக்களுக்கு மேல் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 2000
RSS சேவகர்கள் இறுதி ஊர்வலத்தில் மரியாதை செலுத்தினர். இங்கிலாந்தில் அவர் மீது கல்லெறிந்தால்
இந்தியாவில் அவருக்காகக் கோட்டையையே சாய்க்க இளைஞர்கள் தயாராக
இருந்தார்கள் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

Comments
Post a Comment