முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த கிட்டூர் ராணி சென்னம்மா.
கர்நாடகத்தில் பெல்காம் ராஜ்ஜியத்தின்
அருகே உள்ள ககதி கிராமத்தில் (1778) பிறந்தார். ‘சென்னம்மா’ என்றால் அழகிய பெண் என்று
அர்த்தம். ராஜ குடும்பத் தினர்போல சகல வசதிகளுடன் வளர்ந்தார். சமஸ்கிருதம், கன்னடம்,
மராட்டி, உருது மொழிகளைக் கற்றார். சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில்வித்தையில்
தேர்ச்சி பெற்றார். துணிச்சல்காரப் பெண் என்று பெயர் பெற்றார். 15 வயதில் கிட்டூர்
அரசருடன் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் பிறந்தான். சென்னம்மாவின் திருமண வாழ்க்கை
வெகுகாலம் நீடிக்கவில்லை. 1816-ல் கணவரும் 1824-ல் ஒரே மகனும் இறந்தனர். குழந்தை இறந்தவுடன்,
சிவலிங்கப்பா என்ற உறவுக்கார குழந்தையைத் தத்தெடுத்து அவனுக்கு முடிசூட்டினார். அப்போது
பரவலாக ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் இயற்றி இருந்தது. எந்த மன்னருக்கு வாரிசு இல்லையோ
அந்த மன்னருக்கு பின் அந்த நிலப்பரப்பு ஆங்கில அரசின்பகுதியாக ஆக்கப்படும்.
இந்த சதியை முறியடிக்க ராணி சென்னம்மா
சிவலிங்கப்பாவை சுவீகாரம் எடுத்துக் கொண்டதைக் கண்ட ஆங்கிலேயர் பெரும்படை ஒன்றை அனுப்பி
கோட்டையை முற்றுகையிட்டு கோட்டையிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு காவலுக்கு
ஆங்கிலேயச் சிப்பாய்களை நிறுத்திவைத்திருந்தனர். நாட்டை அபகரிக்கும்
திட்டத்துடன் கிட்டூர் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு விட்டதையும் கோட்டை முற்றுகை
இடப்பட்டிருப்பதையும் சென்னம்மாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்படியும் தாய்
மண்ணை மீட்கவேண்டும் என உறுதி பூண்டார். படைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். ஆலோசனை
செய்தார். தனது நம்பிக்கைக்குறிய படைவீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். தனது தேசத்தை
தியாகபூர்வ யுத்தத்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் சத்தமில்லாமல் கோட்டைக்கு உள்ளேயே
செய்தார். இருப்பினும் கோட்டைக்குள்ளே ஏதோ நடக்கிறது என்ற சந்தேகம் காவலுக்கு நின்ற
ஆங்க்கிலேய சிப்பாய்களுக்கு ஏற்பட்ட்து. உடனடியாக கலெக்டர் தாக்ரேவிற்கு தகவல் சொல்லப்பட்ட்து.
கணவனை இழந்து கடுந்துயரில் உள்ள
ஒரு விதவைப் பெண்ணின் சோகத்தை எதிர்பார்த்த ஆங்கிலேயர்கள் இவ்வளவு தீரமான போராளியை
கனவிலும் நினைக்கவில்லை. உள்ளே ஏதோ ஆலோசனை என்ற செய்தியை கேள்விப்பட்ட கலெக்டர் தாக்ரே
உடனடியாக நான்கு பீரங்கிகளை கொண்ட பெரும்படையுடன் கிட்டூர் கோட்டைக்கு வந்து
சேர்ந்தான். தனது பெரும்படையை பார்த்தும் அஞ்சி நடுங்கி ராணி சென்னம்மா சரணடைந்து விடுவார்
என்பது அவனது எண்ணமாய் இருந்தது. அதனால் மிகவும் அலட்சியமாய் ஆணைகளை பிறப்பித்தான்.
அந்த கோட்டையை கைபற்றி ராணி சென்னம்மாவை கைது செய்து அழைத்துவர குதிரைப் படையினர் நூறு
பேரை அனுப்பிட உத்திரவிட்டான். ஆனால் நடந்தது வேறு, அது வரலாற்றில் செதுக்கப்பட வேண்டிய
சம்பவமாய் அமைந்தது.
நூறுபேர் கொண்ட குதிரைப்படை கோட்டையை
நோக்கி சென்றபோது கோட்டைக் கதவுகள் இவர்களை எதிர்பார்த்து திறந்தே இருந்தன. அலட்சிய
சிரிப்புடன், வென்றுவிட்ட இறுமாப்புடன் கலெக்டர் தாக்ரே படையை சார்ந்த நூறு பேர்
உள்ளே போனதும் அவர்கள் எதிர்பார்க்காத தருணத்தில் திடீரென பிருமாண்டமான கோட்டைக் கதவுகள்
மூடப்பட்டன. அதிர்ச்சியில் மிரண்டு நின்ற ஆங்கிலப் படையை கிட்டூர் வீர்ரகள் மின்னல்
வேகத்தில் வெட்டிச் சாய்த்தனர். மொத்தம் வந்த நூறு பேரில் 98 பேர் கொல்லப்பட்டனர் இரண்டு
ஆங்கில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். ஆங்கிலேயப் படைமுகாமில்
நடந்தது எதுவும் யாருக்கும் புரியவில்லை. இந்த அதிரடித் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத
கலெக்டர் உயிர்பலியைத் தவிர்க்க சமாதானத் தூதனுப்பினான். கிட்டூரின் பத்து கிராமங்களை
உங்களுக்கு தானமாக விட்டுக் கொடுக்கிறோம், எஞ்சியதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்
என எழுதிக்கொடுத்து அனுப்பிய கடித்த்திற்குப் பதிலே இல்லை.
கிட்டூர் ராணி சென்னமாவின் ராஜியத்தில்
சில கிராமங்களை விட்டுக்கொடுக்க இவன் யார்? அதனால் பதில் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த
கலெக்டர் நான்கு பீரங்கிகளில் இரண்டைக் கோட்டைக்கு மிக அருகில் நிறுத்தி வைத்தான்.
நாளை காலைக்குள் சென்னம்மா சரணடையாவிட்டால் கோட்டையைத் தகர்த்துவிடுமாறு உத்திரவிட்டான்.
ஆனால் நடந்தது வேறு மறுநாள் காலை அந்த இரண்டு பீரங்கிகளையும் காணவில்லை. அதாவது அந்த
இரண்டும் கிட்டூர் வீர்ர்கள் தந்திரத்தால் அவர்களது கோட்டைக்குள் சென்றுவிட்டது.
இது கலெக்டரின் இரண்டாவது அவமாணம்.
ஆத்திரம் உச்சந்தலைக்கு ஏற எஞ்சியிருந்த இரண்டு பீரங்கிகளைக் கோட்டைக்கு முன் நிறுத்தி
கோட்டையைத் தகர்க்க ஆணையிட்டான். ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக கோட்டைக்குள் இருந்த
பீரங்கியிலிருந்து குண்டுகள் கோட்டைக் கதவைப் பிளந்துவிட்டு ஆங்கிலேயர்கள் மீது பாய்ந்த்து.
அந்த நேரத்திலேயே கோட்டை மதில் சுவற்றின் மேலிருந்த வீரர்கள் அம்புகளால் ஆங்கிலேயர்
உடல்களைத் துளைத்தனர். போர்களம் சூடானது. இருபக்கமும் இரத்தம் வழிந்தோடியது.
தனது வீரர்களுக்கு கட்டளைகளை
மட்டும் அல்ல களத்திலும் நின்று வழிகாட்டினார் ராணி சென்னம்மா. அவர் கவசமணிந்த குதிரையில்
கம்பீரமாக அமர்ந்து வீர்ர்களுக்கு உத்த்திரவிட்டுக் கொண்டிருந்தாள். மாவீரம் காட்டிய
கிட்டூர் ராணியைக் கொல்லத் தன் கைத்துப்பாக்கியால் குறிபார்த்த கலெக்டரை ராணியின் மெய்க்காப்பாளன்
பாலப்பா சுட்டுக் கொன்றான். அவனது மரணம் ஆங்கிலப் படைகள் சிதறி ஓடச் செய்தது.
அதுவரை மக்களுக்கு அறிமுகமில்லாத நவீனப் போர்கருவிகள் கொண்ட ஆங்கிலேயரைத் தனது
வீரத்தாலும், தந்திரத்தாலும் தோற்கடித்த ராணி சென்னம்மாவின் புகழ் எங்கும் போற்றப்பட்டது.
அத்தோடு நின்றுவிடாமல் தென்பகுதியில்
உள்ள எல்லா சமஸ்த்தானங்களையும் ஒன்றிணைத்து விரிவடைந்த ஒரு தேசிய மேடையமைத்து ஆதிக்கம்
செய்ய வந்த ஆங்கிலேயரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தது. அதற்கான
முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். பல அரசர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
ஆனால் சென்னம்மாவின் முயற்சிக்கு பெரும்பாண்மையான சிற்றரசர்கள் ஒத்துழைக்கவில்லை. ஒருவேலை
இது நடந்திருந்தால் வரலாறு வேறோர் தளத்தில் பயணித்திருக்கும்.
கிட்டூர் ராணி சென்னம்மாவால்அவமானப்பட்ட
வெள்ளையர்கள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தங்களது ஆயிரக்கணக்கான படை
வீரர்களை ஒருங்கிணைத்து மூன்று படைப் பிரிவுகளாகப் பிரிந்து கிட்டூர் கோட்டையை சாப்ளின்
என்பவர் தலைமையில் முற்றுகையிட்டனர். ராணி சென்னம்மா சரணடையாவிட்டால் கோட்டை தகர்க்கப்படும்
எனச் செய்தி அனுப்பப்பட்டது. சரணடைவதைவிட சாவதே மேல் எனக் கருதிய சென்னம்மா கடுமையான
யுத்தத்தை எதிர்கொண்டார். பலநாட்கள் நடந்த கடுமையான போரில் இரு தரப்பிலும் எண்னற்ற
வீரர்கள் உயிர் இழந்தனர். பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் வேல் அம்பினால்
ஈடு கொடுக்க முடியாத கிட்டூர் வீர்ர்கள் கடைசிவரை போராடி மாண்டனர். கடைசியில் வீரப்
போர்புரிந்த கிட்டூர் கோட்டை தகர்க்கப்பட்டது. அந்நியர்களை எதிர்த்து வீர சமர்
புரிந்த கிட்டூர் ராணி சென்னம்மாள் உயிருடன் பிடிக்கப்பட்டாள். பைல்ஹோங்கல் கோட்டையில்
சிறை வைக்கப்பட்டார்.
ராணியிடம் மிகுந்த விசுவாசம்
கொண்ட தளபதி சங்கொலி ராயண்ணா, அவரை விடுவிக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆங்கிலேயருக்கு
எதிராக கொரில்லா முறையில் தொடர் தாக்குதல்கள் நடத்தினார். ஆனால், அவரால் வெற்றிபெற
முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.
புனித நூல்களைப் படித்தும், பூஜைகளில்
ஈடுபட்டும் ராணி தனது சிறை வாழ்வைக் கழித்தார். 51-வது வயதில் சிறையிலேயே (1829) காலமானார்.
விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட முன்னணி வீராங்கனையாகவும், இந்திய சுதந்திரப்
போராட்ட இயக்கத்தின் வீரச் சின்னமாகவும் இன்றளவும் சென்னம்மா கொண்டாடப்படுகிறார்.
கர்நாடகத்தில் இன்றும் மாபெரும்
வீராங்கனையாக சென்னம்மா போற்றப்படுகிறார். அவரது சிலைகள் கர்நாடகாவில் பல இடங்களில்
வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற வளாகத்திலும் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment