இந்திய விடுதலைக்காக தனது
இன்னுயிரை ஈந்த ஒவ்வொரு வீரனும் நமக்கு கடவுள்போல என்றாலும் ஒருசில குறிப்பிட்ட வீரர்களின்
வாழ்க்கை வரலாறு நமக்கு சிலிரிப்பூட்டும் ஒன்றாகும். இப்படியெல்லாம்
கூட ஒருவர் இருந்திருக்க முடியுமா? இப்படியெல்லாம் கூட ஒருவர்
தாய்நாட்டுக்காக தியாகங்களை செய்யமுடியுமா? வாழ்க்கை என்றால்
இதுவல்லவா வாழ்க்கை என்று நெகிழ்ந்து போவோம்.
கடவுளை மறந்தாலும் நமக்காக பலதியாகங்கள் செய்து தேச விடுதலைக்காக
தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களை மறக்கவே கூடாது. அப்படி மறக்கும்
சமூகம் … சரிவிடுங்க… அதை எதுக்கு நம்வாயால் சொல்ல வேண்டும்?
BETTER
LATE THAN NEVER அல்லவா? எனவே இந்த பதிவு அளிக்கப்படுகிறது.
யார்
இந்த உதம்சிங்?
அப்படிஎன்ன தியாகம்
செய்துவிட்டார்?
1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. தற்காப்பு ஏதுமின்றி அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, ஜெனரல் ஓடயர் பிறப்பித்த உத்தரவின் பேரில் சுட்டுக்
கொன்றனர். 90 துப்பாக்கி வீரர்கள் கொண்ட படையும், ஒரு பீரங்கி வண்டியும் இதில் பயன்படுத்தப்பட்டன. அரசியல் காரணங்களுக்காக உண்மையான எண்ணிக்கை வெளியே
சொல்லப்படாவிட்டாலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்
எந்த முன்னறிவிப்புமின்றிச் சுட்டுக்கொல்லப்படனர் என்பது நிதரிசனம்.
இப்படு கொலையைக் கண்டு மனம் கொதித்த உதம்சிங், அமிர்தசரஸில்நீராடி, ஹரிமந்திர்சாகிப்பில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டயரைக் கொல்லுவதாகச்
சபதம் எடுத்துக் கொண்டார். 1899ல் பிறந்த உதம்சிங் ஆசாத் இளவயதிலேயே
தம் பெற்றோரை இழந்தவர். சீக்கிய தர்மகால்ஸா அனாதை இல்லத்தில்
தன் சகோதரருடன் வளர்ந்தவர். 1917ல் அவரது சகோதரர் சாதுசிங் மரணமடைந்தார். 1918ல் அவர் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார். பலமுறை ஆப்பிரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச்
சென்று அங்கே இந்திய தேசிய நடவடிக்கைகளில் தீவிரப்பங்கு பெற்றார்
ஆரியசமாஜம், சீக்கியதருமம், மார்க்ஸியம் ஆகியவற்றால் லாலாஹர்தயாளின் அரசியல் சித்தாந்தம் உருவாக்கப்பட்டிருந்தது. குருகோவிந்தசிங்
பெயரில் மாணவர் உதவிநிதிநிறுவி அவர் தேசபக்தி கொண்டபாரத இளைஞர்களுக்கு உதவி செய்துவந்தார்.இவரதுகதர் (புரட்சி) எனும் இயக்கத்துடன்
உத்தம்சிங் இணைந்தார். 1927ல் பகத்சிங்கிற்காகத் துப்பாக்கிகளையும் தளவாடங்களையும் பாரதத்துக்குள்
கடத்தி வந்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில்
தாம் இந்தியப்பாட்டாளி வர்க்கத்தின் சார்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை கொலை செய்யப்போவதாக
வெளிப்படையாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்சிறையில் இருந்தகாலத்தில் (1931) பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர்
தூக்கிலிடப்பட்டனர்.
1931ல் உதம்சிங் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் போலிஸ்
கெடுபிடிகளில் இருந்து தப்புவதற்காகத் தமதுபெயரை முகமதுசிங் என மாற்றிக் கொண்டார். மிகத் தெளிவான
திட்டத்துடன் அவர் வேலை செய்தார். அவரது உடனடி நோக்கம் இங்கிலாந்து செல்வதாக இருந்தது. அங்கே அவரது வாழ்க்கையின்
நோக்கம் நிறை வேற்றப்பட வேண்டியதாக இருந்தது. பிரிட்டிஷ் சி.ஐ.டி.கள் அவரைத் தொடர்ந்து
கண்காணித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அவர் 1933ல் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து பிரிட்டிஷ் உளவாளிகள் கண்ணில்
மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து 1934ல் இங்கிலாந்துக்குள்
நுழைந்தார். எண் 9, அட்லர்தெரு, கமர்ஷியல்ரோடு, அவரது முகவரியாயிற்று. அங்கே ஒரு காரும்
துப்பாக்கியும் வாங்கிவிட்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மைக்கேல்
டயரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அவருக்கு டயரைக்
கொல்ல பலவாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் அமைதியாக இருந்தார். ஏனெனில் தமக்கு
எளிமையாக இருக்கும் என்பதைக் காட்டிலும் அச்செயல் உலக மக்களுக்கு ஒரு செய்தியாக அமைய
வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.
1940 மார்ச் 13 – ஏறக்குறைய இருபது ஆண்டுகள் – சரியாக ஒரு மாத
கால கட்ட இடைவெளி. காக்ஸ்டன்ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும்ராயல் சென்ட்ரல்
ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக
வந்திருந்தான் டயர். கூட்டத்தில் கையில் ஒரு புத்தகத்துடன் உதம்சிங். புத்தகத்துக்குள்
கச்சிதமாக வெட்டப்பட்ட பக்கங்களுக்குள் ஸ்மித்வெல்ஸன் கைத்துப்பாக்கி. பஞ்சாபில் தாம்
செய்த செயலுக்காகத் தாம் சிறிதளவும் வருத்தப்படவில்லை என்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்
நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் தாம் செய்ததை ஆப்பிரிக்காவிலும் தாம் வாய்ப்பு கிடைத்தால்
அரங்கேற்றச் சித்தமாக இருப்பதாகவும் தன்பேச்சில் டயர் குறிப்பிட்டான். இத்தருணத்தில்
கூட்டத்தில் இருந்த உத்தம்சிங் எழுந்தார். “அந்தவாய்ப்பு உமக்கு
கிடைக்கப் போவதில்லை சர்.மைக்கேல் டயர் அவர்களே” எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். உதம்சிங்கின்குறி
தவறவில்லை முதல்குண்டு அவன்மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் சிதைக்க, தாக்கப்பட்ட மைக்கேல்டயர்
அங்கேயே மரணம் அடைந்தான். இந்திய அரசு செக்ரட்டரியான செட்லாண்ட் காயமடைந்தார். லாமிங்டன் என்கிற
பிரிட்டிஷ் பிரபுவின் கைசிதறிப் போனது.
சிரித்த முகத்துடன் கைதானார் உதம்சிங். பிரிட்டிஷாருக்குத்
தமது கோட்டையிலேயே தமது சாம்ராஜ்யத்தின் வலிமை வாய்ந்த தளபதியை ஓர் இந்தியன் கொன்றான்
என்பது அவமானகரமாக இருந்தது. “உதம்சிங் மனநிலை பிறழ்ந்தவர்” என ஒரு பிரச்சாரத்தை
அவர்கள் தொடங்கினார்கள். இந்நிலையில் பஞ்சாப் பிரமுகர்கள் பலர் உதம்சிங்கை எப்படியாவது விடுவிக்க
வேண்டும் என வக்கீல்களைத் தேடி அலைந்து இறுதியில் கிருஷ்ணமேனனை வக்கீலாக அமர்த்தினர். கிருஷ்ணமேனன் உதம்சிங்கைத்
தான்பைத்தியம் எனஒப்புக் கொள்ளும் படியும் அப்படிச் சொன்னால் தப்பித்து விடலாம் என்றும்
கூறினார். உதம்சிங் வேதனையுடன் அதனை மறுத்து விட்டார் .நீதிமன்ற விசாரணையில்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கோர்ட்டுக்குத் தம்மை விசாரிக்க உரிமையோ தகுதியோ இல்லை என்று
கூறியதுடன் பிரிட்டிஷ் நீதிபதியையும் அங்கிருந்த இதர பிரிட்டிஷாரையும் நோக்கி கூறினார்:
“நான் மரணத்துக்கு
அஞ்சவில்லை. நான் உயிர்துறப்பதில்
பெருமைப்படுகிறேன். என் தாய்
நாட்டை விடுவிக்க உயிர்துறப்பதில் பெருமை அடைகிறேன். நான் போன பிறகு என்னுடைய இடத்தில் என் தேச மக்கள்
வருவார்கள். வந்து அசிங்கம்
பிடித்தநாய்களான உங்களை விரட்டுவார்கள். நீங்கள் இந்தியாவுக்கு வருவீர்கள், பிறகு பிரிட்டனுக்குத் திரும்பிப் பிரபுஆவீர்கள், பாராளுமன்றத்துக்குப் போவீர்கள். நாங்கள் பிரிட்டனுக்குள் வந்தால் எங்களைத் தூக்கில்
போடுவீர்கள். ஆனால் நீங்கள்
பாரதத்திலிருந்து வேரும் வேரடி மண்ணுமின்றிக் களையப்படுவீர்கள். உங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுக்குநூறாகச் சிதறும். பாரதத்தின் வீதிகளில் எங்கெல்லாம் நீங்கள் சொல்லும்
மேற்கத்திய ஜனநாயகத்தின் கொடியும் கிறிஸ்தவமும் ஆக்கிரமித்துள்ளதோ அங்கெல்லாம் இயந்திரத்
துப்பாக்கிகள் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறது.”
இத்தகைய உணர்ச்சிமயமான உரையின் மூலம் அங்கு வந்திருந்த பத்திரிகையாளர், பார்வையாளர்களுக்கு
அவர் ஒரு பைத்தியம் என்கிற பிரிட்டிஷ் பிரச்சாரம் எத்தனை பொய் என்பதையும் தான் ஒரு
தேசபக்தர் என்பதையும் புரிய வைத்து விட்டார். வேறு வழியில்லாமல்
அவரை நீதிமன்றத்திலிருந்து காவலாளர்கள் இழுத்துச் செனறனர். இறுதியாக அவர் “பாரதமாதாகீஜே!” என முழக்கமிட்டபடி
இழுத்துச் செல்லப்பட்டார். நீதிபதி அட்கின்ஸன் அங்கிருந்த பத்திரிகையாளர்களையும் பார்வையாளர்களையும்
அங்கு நிகழ்ந்தவற்றை வெளியே சொல்லக் கூடாதென உத்தரவிட்டார்.
ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக் கயிறை முத்தமிட்டார்.“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட
அவரது உடல் சீக்கியமதச் சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச் சாலையில் புதைக்கப்பட்டது.
1962ல் நேரு உதம்சிங்கை தேசபக்தர் என அறிவித்தார். 1974ல் உதம்சிங்கின்
உடல் பாரதம் கொண்டு வரப்பட்டு அவரது மாநிலமான பஞ்சாபில் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தி
கங்கை நதியில்
கரைக்கப்பட்டது.

Comments
Post a Comment