நவம்பர் 17 1920.
பின்னாளில் எட்வார்ட் VIII என்ற அரசராக முடிசூடிய வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த போது கல்கட்டாவிற்கு விஜயம் செய்தார். அந்நாட்களில் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர் நோக்கியிருந்த பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக நீதி மன்றத்தில் வாதாடி அவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்த தேசபற்று மிக்க வழக்கறிஞர்கள் பலர் இருந்தனர். அப்படி கல்கத்தா பகுதியில் போராடிய வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் கல்கத்தாவில் வேல்ஸ் இளவரசரின் வருகையை புறக்கணிக்க தலைமை தாங்கினார். வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவில் நுழைந்த பொழுது அங்கு சாலைகளிலும், மற்ற இடங்களிலும் வரவேற்க ஒருவர் கூட இல்லை. முழுமையாக பந்த் செய்து புறக்கணிப்பை வெற்றி பெற செய்தார்.
அவர் வழக்கறிஞ்கராக பணியாற்றிய பொழுது அரவிந்தோ கோஷ் என்ற விடுதலை வீரரின் வழக்கையும் கையிலெடுத்துக் கொண்டார். அந்த வழக்குக்கு அலிப்பூர் குண்டுவெடிப்புச் சதி என்று பெயர் இருந்தது. லார்ட் கிங்ஸ்போர்டை குதிராம் போஸும், பிரஃபுல்ல குமார் ஷாக்கியும் கொல்ல முயன்ற போது கிங்ஸ்போர்ட் தப்பினார். ஆனால் இரண்டு அப்பாவி ஆங்கில பெண்மணிகள் இறந்து போயினர். அரவிந்த் கோஷ் இந்தச் சதிக்கு பின்னால் உள்ள தலைவர் என்று ஆங்கில அரசு முடிவுக்கு வந்திருந்தது. ஒருவரும் அவருக்காக வாதிட முன்வரவில்லை. அனால் தேசபக்தி மிகுந்த இந்த கல்கத்தா வழக்கறிஞர் வழக்கை எடுத்துக் கொண்டார். வழக்கு 126 நாட்கள் நீடித்தது. 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 4500 தஸ்தாவேஜூக்களும், பொருட்களும் வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எப்படியாவது கோஷை தூக்கு மேடைக்கு அனுப்ப முயன்றது ஆங்கில அரசு. அந்தத் வழக்கறிஞரின் ஒன்பது நாள் முடிவுரைக்கு பின்னர் அரவிந்த கோஷ் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டார். வழக்கறிஞர் தன் வாதத்திறமையால் கோஷை விடுதலை செய்ததுமல்லாம்ல் அதற்க்காக எந்த ஊதியமும் பெற்றுக் கொள்ளவில்லை. அன்று அவர் வெற்றி பெறாதிருந்தால் நமக்கு ஸ்ரீ அரபிந்தோ என்ற ஞானி கிடைத்திருக்கமாட்டார்.
மேலும் இந்த வழக்கறிஞர் பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மரணப் படுக்கையிலிருந்த பொழுது பெங்கால் ஆர்டினன்ஸ் என்று கூறப்பட்டு வந்த மசோதாவை எதிர்த்துப் போராடினார். தீவிரவாதி என்ற சந்தேகம் மட்டுமே ஒருவரை கைது செய்ய போதுமான காரணம் என்ற நியாமற்ற மசோதா அது. கறுப்பு மசோதா என்ற அழைக்கப்பட்ட அந்த மசோதாவை எதிர்க்க தன்னை படுக்கையிலேயே கோர்ட்டுக்கு எடுத்து செல்ல கேட்டுக் கொண்டார். இரண்டு மருத்துவர்கள் துணையுடன் சென்று வாதாடினார். அந்த மசோதா தோற்றது.
அந்த வழக்கறிஞர் தேசபந்து என்று அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ். தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு. அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.

Comments
Post a Comment