இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20,000 போராளிகளை ஒன்று திரட்டி, புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடியவர். வாழ்வின் பெரும்பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர். வாழ்வின் பிற்பகுதியில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் அரசில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி என்ற பெயரில், தனது 88ஆவது வயதில் 4 மார்ச் 1978இல் காலமானவர்.
இந்திய விடுதலை இயக்கத்தில்
1905ல் லார்டு கர்சான் வங்காளத்தை இரண்டாகப் பிரித்த போது, நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதே காலத்தில் நீலகண்டர், இரகசிய இயக்கமான 'அபினவ பாரத இயக்கத்தைத்' 1907ஆம் ஆண்டில் துவக்கி, இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர பங்காற்றினார். அதனால் நீலகண்டனை ஆங்கிலேயே உளவுக் காவல்துறையினர் இரகசியப் கண்காணிக்கத் தொடங்கினர். இவர் தன் பெயரோடு 'பிரம்மச்சாரி' எனும் பெயரை இணைத்துக் கொண்டார். "சூர்யோதயம்" எனும் பத்திரிகையை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் உள்ள தீவிர குணம் படைத்த வ. உ. சிதம்பரம் பிள்ளை, பிபின் சந்திரபால், பாரதியார், சிங்காரவேலர் போன்றவர்களுடன் நட்பு கொண்டவர்.
ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநாதன், வனத்துறையில் வேலை பார்த்து வந்ததால் தனக்கு ஒரு மான் தோல் வேண்டும் என்று நீலகண்டன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியதால் வாஞ்சிநானுக்கு துணை நின்றதாக நீலகண்டனும் கைது செய்யப்பட்டார். ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிங்காரவேலரின் தொடர்பால், "பொது உடமைக் கட்சியின் துண்டு பிரசுரங்கள் வெளியிட்ட குற்றத்திற்காக 1922இல் பத்து ஆண்டுகள் ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைவாசம் முடித்து வெளியே வருகிறார். நாள் முழுவதும் சுதேசி பிரச்சாரம். அதற்குக் கிடைத்ததோ பசியும், பட்டினியும் தான். பசி தாங்க முடியாமல் இரவு நேரத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு ‘இராப்பிச்சை’ எடுக்க ஆரம்பிக்கிறார், பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலை தனக்கு வந்து விட்டதே என்று நினைத்த அவர், அதையும் நிறுத்தி விட்டார்.விளைவு பல நாள் பட்டினி.
ஒரு நாள் பசி பொறுக்கமுடியாமல். திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த தனது நண்பர் பாரதியாரைப் பார்க்க வருகிறார்.பசியால் வாடிப்போன நீலகண்டனை பாரதியாருக்கு அடையாளமே தெரியவில்லை.
“பாரதி நான்தான் நீலகண்ட பிரம்மச்சாரி” என்று சொன்னவுடன், டேய், நீலகண்டா என்னடா, இது கோலம்” என்று அவரை கட்டி அனைத்துக் கொண்டார்.
“பாரதி, எனக்கு ஒரு
நாலணா (25 பைசா) கொடேன். சாப்பிட்டு நான்கு நாளாச்சு” என்றார். இதைக் கேட்டவுடன் கண்கலங்கிய பாரதி அவருக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கிறார். அப்போது பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சிகரமான பாடல்தான்
“தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” – என்பதாகும்.

Comments
Post a Comment