தமிழகத்துக்கு சோறுபோடும் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்துக்கும் செம்பனார் கோயிலுக்கும் இடையில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் தில்லையாடி. இந்த கிராமத்தில் நெசவுத்தொழில் செய்து வந்த முனுசாமி&மங்கம்மாள் தம்பதியின் மகள் தான் வள்ளியம்மை. நெசவுத் தொழிலாளியான முனுசாமி, பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகன்ஸ்பர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்.
தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நலனுக்காக பாரிஸ்டர் மோகன்தாஸ் காந்திஜி அந்நாட்டின் வெள்ளையர் அரசுக்கு எதிராக நடத்திய அகிம்சாபூர்வமான சத்தியாக்கிரகங்கள் மூன்று கட்டங்களாக நிகழ்ந்தன.
அவ்வறப் போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்தவர்கள் பற்பலர். ஆனாலும், இளம் வீராங்கனை வள்ளியம்மை போன்று அண்ணல் காந்தியின் உள்ளத்தை உருக்கியவர்கள் ஒரு சிலரே.
அரசு சட்ட விதிகளின்படி நடைபெற்ற திருமணங்கள் மற்றும் கிறிஸ்தவ திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றம் மார்ச் 13, 1913 அன்று தீர்ப்பளித்தது. அதன்படி, இந்தியாவிலோ தென்னாப்பிரிக்காவிலோ இந்து, முஸ்லிம், பார்ஸி முறைப்படி நடந்தேறிய திருமணங்கள் ஏதும் சட்டப்படி செல்லாது என்றானது. மற்ற அநீதிகளுடன் இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து இறுதிக்கட்ட சத்தியாக்கிரகம் முடுக்கிவிடப்பட்டது. அதில் பெண்களும் பங்கேற்க வேண்டுமென காந்திஜி கூறினார்.
அதன்படி, அக்டோபர் 1913 இறுதியில் ஜோஹன்னஸ்பர்க் நகரிலிருந்து நியூகாஸிலுக்கு புறப்பட்ட பெண்கள் பேரணியில், வள்ளியம்மையும் அவரது தாயாரும் சேர்ந்து கொண்டனர். பெண்கள் கைது செய்யப்படாததால் அந்த அணி சட்டவிரோதமாக டிரான்ஸ்வால் மாகாணத்தை நோக்கிச் சென்றது. அதன் எல்லையில் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு டிசம்பர் 22, 1913 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் படுமோசமான உணவு, கடுமையான வேலைகள், ஜெயில் துணிமணிகளை துவைத்தல், கட்டாந்தரையில் படுக்கை. அதனால் சிறையில் இருந்தபோதே வள்ளியம்மை நோய்வாய்ப்பட்டார். பின்னர், பாரிஸ்டர் காந்திக்கும் அரசு உள்விவகார மந்திரி ஜெனரல் ஸ்மட்ஸுக்கும் ஏற்பட்ட சமரச உடன்பாட்டிற்குப் பிறகு, தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே (பிப்ரவரி 11, 1914இல்) பெண் சத்தியாக்கிரகிகள் விடுவிக்கப்பட்டனர்.
சிறை சென்ற அன்றே வள்ளியம்மையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறைச்சாலையில் படுத்த படுக்கையாகவே இருந்தார். பிப்ரவரி 11, 1914 அன்று விடுதலையானபோது அவருக்கு கடும் டைபாய்டு காய்ச்சல். விடுதலையான இடத்திலேயே சில நாள்கள் தங்கி சிகிச்சை பெற
நேர்ந்தது.
அண்ணல் காந்தி, தமது ஆங்கிலேய நண்பர் போலக்குடன் அங்கு சென்று பார்த்தார். எலும்பும் தோலுமாக படுத்துக்கிடந்த அப்பெண்ணைக் காண காந்திஜிக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அவர்களுக்கிடையே நடந்த குறுகிய உரையாடலை காந்திஜி தமது சுயசரிதையில் இவ்வாறு பதிந்துள்ளார்:
"வள்ளியம்மா, நீ ஜெயிலுக்குப் போனதற்காக வருந்துகிறாயா?' என்று கேட்டேன்.
"வருத்தமா? இப்போது என்னைக் கைது செய்தாலும் திரும்பவும் ஜெயிலுக்குப் போகத் தயாராக இருக்கிறேன்' என்றாள் ஈனக்குரலில்.
"ஆனால் அப்படிப் போனால் உனக்கு மரணமும் நேரிடலாமே?' என்றேன்.
"அதனால் என்ன? தாய் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய யாரேனும் தயங்குவார்களா?' என்று பதிலிறுத்தினாள்.
இந்தியன் ஒப்பீனியன் என்ற இதழில் காந்தி வள்ளியம்மை குறித்து எழுதுதியது:
‘‘இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்துவிட்டதற்காக வருந்துகிறோம். ஏன் எதற்கு என்று கேட்காலம், தனது கடமையை உணர்ந்து ஆற்றிய காரியை வள்ளியம்மை. மாதர்களுக்கு அணிகலன்களான துன்பத்தை சகிக்கும் மனோபாவம், தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றின் முன்னுதாரணம். நம்பிக்கைதான் அவளது ஆயுதம். எனக்கு இருக்கும் கல்வியறிவு அவளுக்கு இல்லை. சத்தியாகிரகம் என்றால் என்னவென்று கூட வள்ளியம்மைக்குத் தெரியாது. சத்தியாகிரகத்தினால் என்ன நன்மை கிட்டும் என்பது கூட அவளுக்கு தெரியாது. ஆனால் தனது தாய்நாட்டு மக்களுக்காக எல்லையில்லாத உற்சாகத்தோடு அவள் சிறை சென்றாள்.’’
‘‘என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மை மரணம் எனக்கு பேரிடியாக இருந்தது’’ என்றார்.
‘‘வள்ளியம்மை தனது சேவையைக் கொண்டு தனக்கென ஓர் ஆலயத்தை அமைத்துக் கொண்டாள். அவளுடைய புனித உருவம் அனைவர் உள்ளங்களிலும் பதிந்து நிற்கும், இந்தியர் வாழும் வரை தென்னாப்பிரிக்க சத்தியாகிரக வரலாற்றில் வள்ளியம்மை பெயரும் நிலைத்து நிற்கும்.’’ என்று காந்தி குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடந்த போராட்டத்தில் வள்ளியம்மை ஒரு விதையாக இருந்துள்ளார்.
பதினாறே ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என காந்தி பாராட்டியுள்ளார்.

Comments
Post a Comment