மகாத்மா காந்தியின் தலைமையில் சட்ட மறுப்பு போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. அப்பொழுது ஷவ்ரி ஷவ்ராவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு நகரில் மையமாக உள்ள அங்காடிகள் இருக்கும் சந்தையை நோக்கி ஊர்வலம் சென்றார்கள். அவர்கள் “ஆங்கில அரசே! இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்”, “வந்தேமாதரம்” போன்ற கோஷங்கள் எழுப்பிச் சென்றார்கள். அப்பொழுது கலவரங்களை எதிர்பார்த்து காத்திருந்த போலீஸ் படை ஆகாயத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூடு நிகழ்த்தியது. மேலும் போராட்ட ஊர்வலத்திலிருந்த மூன்று பேரை மிகக் கொடூரமாக போலீஸ் தடியால் அடித்தது. அடித்ததில் மூவரும் உயிர் நீத்தனர். வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள் மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகளை மறந்து கையில் இருந்த தீப்பந்தங்களுடன் போலீஸ் படையை துரத்தி சென்று அவர்களில் இருபத்து மூன்று பேரை மாய்த்தது. மிகவும் துயரமான இச்சம்பவம் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஷ்வ்ரி ஷவ்ரா கலவரம் என்று வர்ணிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரசு போராட்டக்காரர்களில் 225 பேரை கைதுசெய்து அவர்களை தூக்கு தண்டனைக்கு பரிந்துரைத்தது. அப்பொழுது ஒரு தலைவர் தான் 1909 முதல் நிறுத்தி வைத்திருந்த வழக்கறிஞர் தொழிலை கையில் எடுத்தார். தன் வாதத் திறமையால் 153 பேரை குற்றமற்றவர்களாக பிரிட்டிஷ் அரசிடம் நிறுபித்து அவர்கள் விடுதலை அடையச் செய்தார்.
இந்தத் தலைவர் சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் மாநாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்ப்பார். 1886 முதல் 1936 வரை அநேகமாக அனைத்து காங்கிரஸ் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொண்டார். 1906 ஹிந்து மஹாசபா இயக்கத்தை நிறுவினார். இவர் பிரிட்டிஷ் காலனிகளுக்கு வேலை செய்யும் பொருட்டு இந்தியர்களை அடிமைகளாக கொண்டு செல்வதை எதிர்த்து போராடினார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 1918, 1932 மற்றும் 1933ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்படி பல்வேறு துரைகளிலும் பணியாற்றிய மற்றும் இந்தியாவின் விடுதலைக்கு போரடியவருமாகிய அந்தத் தலைவர் மதன் மோகன் மாளவியா.
ஒரு சிறுசம்பவம்:-
மதன் மோகன் மாளவியா காசி மாநகரத்தில் ஒரு இந்து பல்கலைக் கழகத்தை அமைக்க விரும்பினார். அதற்கான பொருளைப் பெற, பல ஜமீன்தார்களையும், செல்வந்தர்களையும், நவாப்புகளையும் சென்று பார்த்தார்; பொருள் பெற்றார்.
காசியை அப்போது ஆண்டு கொண்டிருந்த நவாப்பின் அரண்மனைக்கு சென்றார் மாளவியா. தன் நோக்கத்தை சொல்லிப் பொருளுதவி செய்ய வேண்டினார். அப்போது யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது. நவாப் “பொருள் தர முடியாது” என்று சொல்லியதோடு தன் காலில் இருந்த காலணி ஒன்றைக் கழற்றி மதன்மோகன் மாளவியா மீது எறிந்தான். சபை ஸ்தம்பித்து அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. மாளவியா அந்தக் காலணியை கையில் எடுத்துக்கொண்டு “மிக்க நன்றி மன்னர் பிரானே” எனக் கூறி, அரண்மனையை விட்டு வெளியே வந்தார்.
வந்தவர், அரண்மனை வாசலில் ஒரு மேடையின் மீது ஏறி நின்று, “பெரியோர்களே, காசி மாநகரத்துச் சீமான்களே, சீமாட்டிகளே இதோ காசி மாநகரத்தின் நவாப் அணிந்த காலனி... ஏலத்திற்கு விடப்போகிறேன். எடுப்பவர்கள் எடுக்கலாம்'' எனச் சத்தமிட்டுக் கூவினார். பொதுமக்கள் ஆச்சரியத்தோடு வந்து, கால்பணம் அரைப் பணம், ஒரு பணம் என்று கூச்சலிட்டனர். இதைப் பார்த்த அரண்மனை அதிகாரி அவசரமாக உள்ளே ஓடி “அரசே உங்கள் காலணி ஏலம் போடப்படுகிறது. கால்பணம், அரைப்பணமாம். அவமானம், அவமானம் என்று சொல்ல, அதைக் கேட்டு திடுக்கிட்ட நவாப் தன் நிதிமந்திரியை அழைத்தார்.
“ஓடுங்கள் உடனே அதனை ஏலத்தில் எடுங்கள். என்ன செலவானாலும் சரி…” என ஆணையிட்டார். நிதிமந்திரி விரைந்து சென்றார். அதற்குள் ஏலம் சூடு பிடித்தது. முடிவில் நிதிமந்திரி ஒரு லட்சம் வராகனுக்கு அச் செருப்பை ஏலம் எடுத்து மன்னரிடம் கொண்டு வந்தார்.
சற்று நேரத்தில் மீண்டும் உள்ளே வந்த மதன்மோகன் மாளவியா அவர்கள் “அரசே என் மீது தங்கள் செருப்பை எறிந்தமைக்கு மிகுந்த நன்றி. மற்றதை எறிந்தாலும் பெற்றுக் கொள்வேன்” எனப் பெருமிதத்தோடு சொல்லிச் சென்றார்.
இன்று பெருமையுடன் முதன்மைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தை 1916இல் நிறுவினார். மதன் மோகன் மாளவியா ஆற்றிய கல்வித் தொண்டுக்காகவும் இந்திய விடுதலைப் போராட்டங்களில் அவரின் பங்களிப்புக்காகவும் பாரத் ரத்னா விருதை அவருக்கு தற்போதைய இந்திய அரசு வழங்கியது.

Comments
Post a Comment